Saturday, September 30, 2006

On PMK .. Stalin ... Periyar - ஆ.வியில் சோ

கேள்வி: கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பா.ம.க தனது சொந்த இடங்களிலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. அதற்குப் பழைய வலிமை இல்லை என்கிறார்களே ?

பதில்: பா.ம.க வை தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக நான் கருதவில்லை. "நீயும் விட்டு விடு, நானும் சேர்த்துக்க மாட்டேன்" என்று தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும் இவர்களை கை விட்டு விட்டால், அந்த தேர்தலோடு அந்தக் கட்சி ஒரு முடிவுக்கு வந்து விடும் (அப்படி ஒரு நிலை வந்தால் பா.ம.க வின் உண்மையான பலம் தெரிய வாய்ப்புள்ளது). இரண்டு அணிகளிலும் சாராமல் தனியாக நின்றால், அவர்களால் இரண்டு ஸீட் கூட ஜெயிக்க முடியாது !
*********************

கேள்வி: உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் பொறுப்பு ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறதே ?

பதில்: அப்படி நடந்தால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஸ்டாலினுக்கு தலைமைப்பதவி கொடுப்பது என்பது திமுகவைப் பொறுத்தவரை இயல்பான ஒன்று தான். திமுக தலைமைக்கே கூட ஸ்டாலினை விட்டு விட்டு, வேறு யாரையாவது கொண்டு வந்தால், கட்சி கட்டுக்கோப்பாக இருக்காது. மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவர் மகன் ஜிகே வாசனை அரசியலுக்கு அழைத்து வந்தார்கள். அன்றைக்கு அவரோடு வந்த தமாகவினர் இன்றைக்கும் காங்கிரஸில் வாசன் பக்கம் தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே ! கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல், கட்சியின் அடிமட்ட நிலையில் இருந்து, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி விட்டுத் தான் தற்போதைய இடத்துக்கு வந்திருக்கிறார். அதனால், வாரிசு அரசியல் என்பது இங்கே பொருந்தாது. (கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன்) அவர் முதலமைச்சராக வந்தால், அந்தப் பொறுப்பில் எப்படிப் பரிமளிக்கப் போகிறார் என்பது வேறு விஷயம் !
*************************

கேள்வி: அண்மையில் பெரியார் சிலைக்கு சிலர் சந்தனம் பூசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதில் உங்கள் கருத்தென்ன ?

பதில்: இந்த விஷயம் பெரியாரை, அவருடைய நினைவுகளைக் கிண்டல் செய்வதற்கு சமமானது. அது காந்தி சிலைக்கு மாமிசம் படைப்பது போன்ற ஒரு செயல் என்று துக்ளக்கில் குறிப்பிட்டிருக்கிறேன். அதே சமயம், பெரியார் சிலையை அவமதித்தவர்கள் பன்றிக் குணம் படைத்தவர்கள் என்று முதல்வர் கொதித்தெழுந்திருக்கிறார். அப்படியானால், முன்பு சேலத்தில் ராமர் படத்துக்குச் செருப்பு மாலை அணிவித்து, ராமரைப் பற்றிய அருவருப்பான வர்ணனைகளை வெளிப்படுத்தி, பெரியாரும் அவரது சீடர்களும் ஊர்வலம் நடத்தினார்களே ... அது என்ன குணம் என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும் (இப்படி எடக்கு மடக்கா கேட்டா எப்படிங்க ?). இம்மாதிரி செயல்களை ஒரு முறை நியாயப்படுத்தினாலும், அதன் பிறகு அதுவே பல வக்கிரங்களுக்கு இடம் அளித்து விடுகிறது !

--- எ.அ.பாலா

நன்றி: ஆனந்த விகடன்

*** 236 ***

சிறு வயது சிந்தனைகள்-II


***** REPUBLISHED *****

என்னவோ தெரியவில்லை! நம்மில் பலருக்கு பழைய நினைவுகளை அசை போடுவதும், அதனால் ஏற்படும் அலாதியான மனமகிழ்ச்சியும் அடிக்கடி நிகழ்பவையாக உள்ளன. சகோதரி பத்மினி தன் தங்கைக்கு எழுதும் தொடர் கடிதங்களில், தன் சிறுவயது சம்பவங்களை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். நமது Bloggers-இல் பலர், தங்கள் வலைப்பதிவுகளில், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், "அந்த நாளும் மறுபடி வாராதோ?" என்ற தொனியில் எழுதியிருக்கிறார்கள் என்றே கூறுவேன்.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் 'ப்ருந்தாரண்ய ஷேத்ரம்' என்றழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் தான். தந்தையார் என் சிறு வயதிலேயே தவறி விட்டதால், என் அம்மா வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது நான் 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கிறித்துவப் பள்ளியின் (Montessori) தலைமையாசிரியரான, மிகுந்த கனிவும் இரக்க குணமும் கொண்ட Johannes அம்மையார் என் அம்மாவை ஆசிரியை பணிக்கு வருமாறு கூறினார்கள்.

என் தாய்வழிப் பாட்டனார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்பதாலோ என்னவோ, எனக்கு படிப்பில் ஈடுபாடு இயற்கையாகவே அமைந்திருந்தது. சிலேட்டில் 'a b c d' சரியாக எழுத வரவில்லையென பலமுறை அழுதிருப்பதாக, என் முதல் வகுப்பு ஆசிரியை, காலஞ்சென்ற திருமதி ராஜி, பிற்காலத்தில் கூறி சிரித்திருக்கிறார்கள்! நான் கல்வியார்வத்துடனும், அமைதியான குணமுடனும் காணப்பட்டதால், Johannes அவர்களுக்கு என் மேல் தனிப்பட்ட பிரியம் இருந்தது. கருணையும் கண்டிப்பும் ஒரு சேர அமைந்த அவரிடம் எனக்குப் பிடித்தவை அவரின் முத்து முத்தான கையெழுத்தும், ஆங்கில இலக்கண அறிவும் தான். என் நினைவில் என்றும் வாழும், என் முதல் ஆசான் அவரே ஆவார்.

நான் (ஆறாம் வகுப்பிலிருந்து) இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலும், அவரை மரியாதை நிமித்தம் அவ்வப்போது பார்க்கச் செல்வேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் என் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அவர் பள்ளிக்கு வரும் பெற்றோர்களிடம் நான் அவர் மாணவன் என்று பெருமிதத்துடன் கூறுவார். தேர்வு சமயங்களில், கிறித்துவ முறைப்படி என்னை மண்டியிட வைத்து ஆசிர்வதித்துத் தான் அனுப்பி வைப்பார்!!! அவரின் அந்த ஆசிர்வாதம் எனக்கு வெகுவாக உதவியது என்று திடமாக நம்பினேன். 1981-இல் அவர் எனக்களித்த நல்லொழுக்கச் சான்றிதழை ஒரு பொக்கிஷம் போல் இன்று வரை பாதுகாத்து வருகிறேன்.

ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. Johannes அவர்கள் இறக்கும் தறுவாயில் என்னை பார்க்க விரும்பினார். நான் செல்வதற்குள், அவர் உயிர் பிரிந்தது என்னுடைய துர்பாக்கியம்.

என் பெண்ணும் நான் பாடம் பயின்ற Montessori பள்ளியில் தான் தன் கல்வியைத் தொடங்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அப்போது தலைமையாசிரியராக இருந்த Johannes அவர்களின் மகளிடம் கூறியபோது, அவர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். சிறிது காலம் அங்கு படித்த என் மகள், இப்போது வேறு பள்ளியில் கல்வி கற்கிறாள். என் இரண்டாவது பெண்ணுக்குத் தான் அந்த கொடுப்பினை இல்லை போலும்!

Johannes அவர்களின் மகளும் சில வருடங்களுக்கு முன் இறந்து போனதால், பள்ளி மூடப்பட்டு, அக்கட்டிடமும் இடிக்கப்பட்டு, அங்கே ஒரு காபிப்பொடி கடையும், ஒரு சிறு Super Market-உம் தோன்றி விட்டன! என் பள்ளி இருந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், நெஞ்சு சற்று கனத்துத் தான் போகிறது! நான் படித்த பள்ளி, இலைகளும் மலர்களும் பழங்களும் கூடிய உயிரோட்டமிக்க ஒரு அழகான சிறு மரம் போன்றதென்றால், தற்போதைய கட்டிடம் கிளைகள் தவிர வேறெதுவும் இல்லாத உயிரற்ற ஒரு சூனிய மரமாகவே எனக்கு காட்சியளிக்கிறது. பள்ளி இருந்த காலத்தில், அதன் முகப்பையாவது ஒரு புகைப்படமாக எடுத்து வைத்திருக்கலாம் என்று இப்போது நினைத்து என்ன பயன்? வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் கூட, சில மாற்றங்களை மனதளவில் நம்மால் ஏற்க முடிவதில்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, September 25, 2006

திவ்ய தேசம் 4 - திருவன்பில்

இந்த வைணவ தருத்தலம் லால்குடியிலிருந்து 8 கிமீ தொலைவில், கல்லணையிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துப் பாதையில், அன்பில் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வைணவ திவ்ய தேசத்திற்கு, திருமாலயந்துறை, (மண்டூகமுனி இங்கு தொழுததால்) மண்டூகபுரி, (பிரம்மன் இங்கு வழிபடதால்) பிரம்மபுரி என்ற பெயர்களும் உண்டு. கொள்ளிடம் நதியின் வடகரையில் அன்பிலும், மறுகரையில் கோயிலடியும் (திருப்பேர் நகர்) அமைந்துள்ளன. காவிரி பாயும் பரப்பின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கபட்டினம் (கர்னாடக மாநிலம்), ஸ்ரீரங்கம், அன்பில், கும்பகோணம், இந்தளூர் (மயிலாடுதுறை) ஆகிய ஊர்கள் பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்று அறியப்படுகின்றன. இப்புண்ணியத் தலத்திற்கு பிரேமபுரி மற்றும் திரிவேணி (காவிரி, நிலத்தடியில் ஓடிய சாவித்திரி மற்றும் பல்குனி நதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதால்) என்ற புராதனப் பெயர்களும் உண்டு.
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
வடிவழகிய நம்பி என்று அழைக்கப்படும் தலப்பெருமாள் கிழக்கு நோக்கி கிடந்த திருக்கோலத்தில் (புஜங்க சயனத்தில்) அருள் பாலிக்கிறார். தாயாருக்கு அழகியவல்லி (சுந்தரவல்லி) நாச்சியார் என்று திருநாமம். உத்சவ மூர்த்தி சுந்தரராஜப் பெருமாள் ஆவார். பெருமாள், தாயார் இருவருமே இங்கு சுந்தர சொரூபமாக காட்சியளிக்கின்றனர் ! விமானம் தாரக விமானம் என்றும், தீர்த்தம் மண்டூக புஷ்கரிணி என்றும் அறியப்படுகின்றன. அன்பிலில், சத்யவாகீஸ்வரரும், சௌந்திரநாயகியும் எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற அன்பிலாலந்துறை சைவ திருத்தலமும் அமைந்துள்ளது.
Photobucket - Video and Image Hosting
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பாசுரத்தில், பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் உள்ள திருக்குடந்தை, திருவெ·கா, திருவள்ளூர், திருவரங்கம், திருப்பேர் நகர், திருப்பாற்கடல் மற்றும் திருவன்பில் ஆகிய ஏழு திருக்கோயில்களும் சுட்டப்பட்டுள்ளன. திருமழிசை பிரான், இவ்வேழு தலங்களில் பாம்புப் படுக்கையில் சயனித்திருக்கும் நெடிய ஆதி நாராயணனின் அடியில் தஞ்சமடைபவரின் உள்ளத்திலும் உணர்விலும் அப்பரந்தாமனே நிறைந்து அவர்களை ஆட்கொள்வான் என்று பாடுகிறார்.

2417@..
நாகத்தணைக் குடந்தை* வெ·கா திருவெவ்வுள்*
நாகத்தணை அரங்கம் பேரன்பில்*
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்.
Photobucket - Video and Image Hosting
பிரம்மனும், வால்மீகியும் இங்கு திருமாலை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. அன்பில் திருத்தலம், இவ்விரு சிருஷ்டி கர்த்தாக்களுடன் தொடர்புடையது. அதாவது, பிரம்மன் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிவத்தை மனதில் கொண்டும், வால்மீகி முனி பெருமாளின் கல்யாண குணங்களை மனதில் கொண்டும், முறையே, உலக உயிர்களையும், அவற்றின் தன்மைகளையும், உலகில் வாழத் தேவையான பொருட்களையும் உருவாக்கினர். இந்த சிருஷ்டிக்குப் பின்னால், (பரந்தாமன் மேல்) அவர்களின் பேரன்பு காணப்படுவதால், இத்தலம் "அன்பில்" என்ற பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. உலகில் உள்ள அனைத்தும், அன்பு சார்ந்தவையே என்பதை இத்திருத்தலம் உணர்த்துகிறது !

மற்றொரு பழங்கதை, மண்டூக முனிவர் ஒரு முறை நீருக்கடியில் பெருமாளை நினைந்து கடும் தவத்தில் இருந்தபோது, கோபத்திற்கு பேர் போன துர்வாசர் அவ்வழி வந்ததை கவனிக்கத் தவறியதாகவும், வெகுண்ட அச்சின முனி மண்டூகரை தவளை உருவம் கொள்ளுமாறு சபித்ததாகவும், பின்னர் இத்தலத்தில் பெருமாளை வணங்கியதால் மண்டூகரின் சாபம் நீங்கியதாகவும், கூறுகிறது. அதனால் தான், குளம் மண்டூக புஷ்கரிணி என்று அழைக்கப்படுகிறது.
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
சோழர்களால் கட்டப்பட்ட ராஜகோபுரம் மூன்று நிலைகள் (3-tier) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் பல அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. சுந்தர சோழன், ஒவ்வொரு முறையும், போருக்குச் செல்வதற்கு முன், தன் உடைவாளை கோயிலின் த்வஜஸ்தம்பத்தின் முன் வைத்து, பெருமாளை வணங்கிச் சென்றதாக, இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சோழர்கள் இக்கோயிலுக்கு அளித்த மானியங்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

என்றென்றும் அன்புடன்
பாலா

photo courtesy: Just.Clicking

* 235 *

Saturday, September 23, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 12

சில SPB பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை ...

2. பாலைப் போல கள்ளும் கூட வெண்மையானதே, பருகிடாது விளங்கிடாது உண்மையானது ...

3. வட்ட நிலவு அது மேலே போச்சு, கட்டி இழுத்தா ....

4. கன்னி மயக்கத்தில் திருநாள், கையில் குழந்தையும் அதனால்

5. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ...

6. எத்தனைக் காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை ...

7. கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவோ இளவரசி ...

8. சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில், செந்தூரம் ...

9. எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா ...

10. சுற்றி வரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்...

11. விஷயங்கள் பல அறிஞ்சவன் நான், வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்

12. தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும், பொன்னூஞ்சல் ஆடிடும்...


என் நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, September 21, 2006

புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக

அலகாபாத் உயர்நீதி மன்றம், ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு பொருளாதாரச் சலுகைகள் வழங்குவதைத் தடுத்து வெளியிட்ட இடைக்கால ஆணைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரக்கு வேண்டி, ஏற்கனவே செய்துள்ள ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கு மட்டுமே, இத்தடை செல்லுபடியாகும் என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

அரசு வழக்குரைஞர், இத்தடை வழங்கப்படவில்லையெனில், அரசுக்கு பெரும் பொருளிழப்பும், உலக அரங்கில் தலை குனிவும் ஏற்படும் என்று வாதாடினார். மேலும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் இந்திய ஹஜ் பயணிகள் தங்கும் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து சவுதி அரேபிய அரசுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

அலகாபாத் உயர் நீதி மன்றம், தன் பார்வைக்கு வந்த சிவசேனாவின் (1995ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட !) மனுவை ஏற்று, ஹஜ் புனித யாத்திரை என்றில்லாமல், அனைத்து மத யாத்திரைகளுக்கும், மத்திய / மாநில அரசுகள் மானியம் / சலுகைகள் வழங்குவதற்கு, இடைக்கால தடை ஆனையை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு அரசு ஆவன செய்வதை தடை செய்யவில்லை.

எந்த மத யாத்திரைக்கும் அரசுப்பணத்தை செலவழிக்கக் கூடாது என்று இடைக்கால ஆணை சொல்வதால், இப்பிரச்சினை அரசியல் ஆக்கப்பட மாட்டாது என்று நம்பலாம் ! கத்தோலிகக் கிறித்துவர்கள் புனித பூமியாகக் கருதும் வாடிகனுக்கு யாத்திரை செல்வதற்கு அரசு ஏதாவது மானியம் / சலுகைகள் அளிக்கிறதா என்று விஷயம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது. அந்தந்த மதம் சார்ந்த அறக்கட்டளைகள், புனித மதப் பயணங்களுக்கு வேண்டிய உதவிகளை யாத்திரிகர்களுக்கு செய்யலாம் என்பது என் எண்ணம். உயர்நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, அரசும், அரசியல்வாதிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம் !

--- எ.அ.பாலா

* 233 *

திவ்ய தேசம் 3 - திருவெள்ளறை (ஸ்வேதகிரி)

இந்த வைணவ திருத்தலம் திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில், துறையூருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள் ஆனார் என்று நம்பப்படுகிறது.
Photobucket - Video and Image Hosting
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து, மூலவர் புண்டரீகாக்ஷப் பெருமாள் (செந்தாமரைக் கண்ணன்) அருள் பாலிக்கிறார். தாயார் செண்பகவல்லி (செங்கமலவல்லி) என்கின்ற பங்கயச் செல்வி. தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உத்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம். விமானம், விமலாக்ருதி விமானமாகவும், வில்வமரம் தல விருட்சமாகவும் அறியப்படுகின்றன.

திவ்ய கந்த, குச, சக்கர, புஷ்கல, பத்ம, வராக, மணிகர்ணிகா என்று மொத்தத்தில் ஏழு தீர்த்தங்கள் கோயில் வளாகத்துள்ளேயே அமைந்துள்ளன. இவ்வைணவ திருப்பதியை, பெரியாழ்வார் (பெரியாழ்வார் திருமொழியில் 11 பாசுரங்கள்) மற்றும் திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழியில், சிறிய திருமடலில் மற்றும் பெரிய திருமடலில் சேர்த்து 13 பாசுரங்கள்) மங்களாசாசனம் செய்துள்ளனர்.

அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு:
Photobucket - Video and Image Hosting
பெரியாழ்வார் அருளியவை:
**********************
ஆறாம் திருமொழி - உய்யவுலகு
(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)

71@..
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி*
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்*
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய்.* மதிள்சூழ்-
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.*
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை*
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.

எட்டாம் திருமொழி - இந்திரனோடு
(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)

192@..
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மாமலர் கொண்டு* மறைந்துஉவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதிரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இதுவாகும்* அழகனே. காப்பிடவாராய். (2) 1.

197@
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்* கருநிறச் செம்மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணிமாட* மதிள்திரு வெள்ளறை நின்றாய்.
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே. காப்பிடவாராய். 6.

198@
கள்ளச் சகடும் மருதும்* கலக்கழிய உதை செய்த*
பிள்ளையரசே.* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளிஉடை வெள்ளறை நின்றாய்.*
பள்ளி கொள் போது இதுவாகும்* பரமனே. காப்பிடவாராய். 7
.
*********************************************
Photobucket - Video and Image Hosting

திருமங்கையாழ்வார் 'பெரிய திருமொழி'யில் அருளியவை:
************************
ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி

இந்த பத்து பாசுரங்களில், தன்னை அடிமையாக ஏற்று, பெருமானின் திருவடியில் தொண்டு செய்ய, தடங்கல்களை நீக்கி அருளுமாறு திருவெள்ளறை புண்டரிகாஷனை வேண்டுகிறார் !

1368@..
வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை* மூவெழுகால்கொன்றதேவ*
நின்குரைகழல் தொழுவதோர்வகை* எனக்கருள்புரியே*
மன்றில்மாம்பொழில் நுழைதந்து* மல்லிகைமௌவலின் போதலர்த்தி*
தென்றல்மாமணம் கமழ்தரவரு* திருவெள்ளறை நின்றானே (5.3.1)

பரசுராமனாக, கையில் மழு ஏந்தி, பூவுகில் இருபத்தோரு தலைமுறை அரசர்களை அழித்தவனே ! மல்லிகைப் பந்தல் வழி வரும் தென்றலானது, வானுயர்ந்த சோலைகளில் நுழைந்து, தான் ஏந்தி வந்த நறுமணத்தை எங்கும் கமழச்செய்யும் திருவெள்ளறையில் கோயில் கொண்டவனே ! ஒளி மிக்க தாமரையத்த உன் திருவடிகளை என்றும் பற்றிட வழிமுறை ஒன்று எனக்கருள்வாயாக !
********************************

1371@
வாம்பரியுக மன்னர்தம் உயிர்செக* ஐவர்க்கட்கு அரசளித்த*
காம்பினார் திருவேங்கடப் பொருப்ப.* நின் காதலை அருள் எனக்கு*
மாம்பொழில் தளிர்கோதிய மடக்குயில்* வாயது துவர்ப்பெய்த*
தீம்பலங்கனித் தேனது நுகர்* திருவெள்ளறை நின்றானே (5.3.4)

யுத்த பூமியில் எதிர்த்து நின்ற அரசர்களை அழித்து, பஞ்ச பாண்டவர்க்கு அவர்க்குரிமையான அரசை மீட்டுத் தந்த கண்ணபிரானே ! திருவேங்கடம் வாழ்பவனே ! மாவிலைகளை உண்டதால் நாவில் ஏற்பட்ட கசப்பை, பக்கமிருக்கும் பலாவின் தேனைக் குடித்து போக்கிக் கொள்ளும் குயில்கள் பாடும் திருவெள்ளறை நின்ற பெருமாளே, உன் மேல் எனக்கிருக்கும் பேரன்பு எப்போது நீங்கா வண்ணம் எனக்கருள்வாயே !
*****************************************

1372@
மானவேல் ஒண்கண்மடவரல்* மண்மகள்அழுங்க முந்நீர்ப்பரப்பில்*
ஏனமாகி அன்றுஇருநிலம் இடந்தவனே.* எனக்கருள் புரியே*
கானமாமுல்லை கழைக் கரும்பேறி* வெண்முறுவல் செய்துஅலர்கின்ற*
தேனின் வாய்மலர் முருகுகுக்கும்* திருவெள்ளறை நின்றானே (5.3.5)

முன்பொரு முறை, அலை பாயும் பெரிய அழகிய கண்களை உடைய பூதேவி, கடலடியில் பெருந்துயரில் உழன்றபோது, நீ வராக அவதாரமெடுத்து, கொம்பின் மேல் ஏற்றி, அவளை மீட்டெடுத்தாய். கரும்பின் மேல் படர்ந்து, வெண் சிரிப்பை உதிர்ப்பது போல் தோற்றமளிக்கும் பெரிய முல்லைக் கொடியில் தேனுண்ணும் வண்டுகள் நிறைந்த திருவெள்ளறை நகர் வாழ் பெருமாளே ! எனக்கு அருள் புரிவாய் !

*********************************

1376@
ஆங்குமாவலிவேள்வியில் இரந்துசென்று* அகலிடம் முழுதினையும்*
பாங்கினால்கொண்டபரம. நின்பணிந்தெழுவேன்* எனக்கு அருள்புரியே,*
ஓங்குபிண்டியின் செம்மலரேறி* வண்டுஉழிதர*
மாவேறித்தீங்குயில் மிழற்றும்படப்பைத்* திருவெள்ளறை நின்றானே (5.3.9)

முன்பொரு முறை, வாமன அவதாரமெடுத்து, மாபலிச் சக்ரவர்த்தி நடத்திய யாகத்தின் போது, அண்டம் முழுவதையும் அவனிடம் பாங்காக இரந்து பெற்ற பரமனே ! அசோக மரங்களின் சிவந்த மலர்களில் மகிழ்ச்சியாக விளையாடும் வண்டுகளைப் பார்த்து இனிமையாகப் பாடும் குயில்கள் நிறைந்த திருவெள்ளறை நகரில் கோயில் கொண்ட பெருமானே ! உன்னை என்றும் தொழுது உனக்கு தொண்டு செய்ய எனக்கு அருள் புரிவாயாக !
***********************************

1377@..
மஞ்சுலா மணிமாடங்கள்சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம்புரையும் திருவுருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சுலாவிய வேல்வலவன்* கலிகன்றிசொல் ஐயிரண்டும்*
எஞ்சலின்றிநின்று ஏத்தவல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே (5.3.10)

அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவெள்ளறையில் என்றும் ஆட்சி புரியும் அழகிய திருமேனி கொண்டானை (அஞ்சன வண்ணன்), ஆதி நாயகனை (ஜகத் காரணன்), அமுதை ஒத்தவனைப் பற்றி, விடம் தோய்த்த வேல் கொண்டு பகைவர்களை விரட்டும் கலியனாகிய நான் இயற்றிய இப்பத்து பாடல்களையும் தவறாமல் படிக்கும் அடியார், தேவர்களுக்கு அரசன் ஆவர்!
****************************************************

பத்தாம் பத்து - முதல் திருமொழி

1851@
துளக்கமில் சுடரை,* அவுணனுடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*
அளப்பில் ஆரமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினை* சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4

என்றும் ஒளி குறையா பெருஞ்சுடர் போன்றவனை, ஹிரண்யனின் உடல் பிளந்த வலிமை மிக்கவனை, நாம் திருப்பேர் நகர் சென்று அடி பணிவோம். உண்ண உண்ண தெவிட்டாத அமுதம் போன்றவனை, நித்யசூரிகளுக்கு அருள் விளக்காய் இருப்பவனை, இன்றே திருவெள்ளறை நகர் சென்று, அவன் மலரடி பற்றி நாம் வணங்குவோமாக !
**************************
Photobucket - Video and Image Hosting
விசாலமான வளாகமும், பிரும்மாண்டமான மதில் சுவர்களும் இக்கோயிலின் சிறப்பு அம்சங்கள். முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளன. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.

ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில் பெருமாள் பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்து இங்கு காட்சியளிப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் (ராமானுஜர்) இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன. நாதமுனிகளின் பிரதம சீடரான உய்யக்கொண்டான் மற்றும் எங்களாழ்வான் ஆகியோரின் அவதாரத்தலம் இது. உடையவர் ஸ்ரீராமானுஜர் இங்கு சிறிது காலம் வாழ்ந்து வைணவத்தை வளர்த்திருக்கிறார். மணவாளமாமுனிகளும், வேதாந்த தேசிகரும் (தனது ஹம்ச சந்தேஸத்தில்) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இத்தலத்தைப் பற்றி பாடியிருக்கின்றனர்.
Photobucket - Video and Image Hosting
கருடாழ்வாரும், மார்க்கேண்டயரும், சிபிச் சக்ரவர்த்தியும் வழிபட்ட புண்ணியத் தலமிது. சிபிச்சக்கரவர்த்திக்கு ஸ்வேத வராஹனாக (வெள்ளைப் பன்றி) தலப்பெருமாள் காட்சி தந்து அருள் பாலித்ததால், மூலவருக்கு ஸ்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதபுரி ஷேத்திரம் என்றும் பெயர் வந்தது. வடக்கு வாயிலில் உள்ள ராஜகோபுரத்தில், ஹொய்ஸாலா மன்னர்கள் இக்கோயிலுக்கு செய்த திருப்பணிகள் குறித்த வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இங்குள்ள பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளன. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. கோயிலுக்கு, உத்தராயண வாயில் என்றும் தக்ஷ¢ணாயன வாயில் என்றும் (கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில் உள்ளது போலவே) இரண்டு வாயில்கள் உள்ளன. தை முதல் ஆணி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷ¢ணாயன வாசல்வழியாகவும், பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.

இவ்வாசல்களை குறித்து ஒரு சிறு விளக்கம்: மனித வாழ்க்கையில் ஜனனம், மரணம் என்று இரு தனி வாசல்கள் உள்ளதாகக் கருதலாம். அவற்றில் நுழையும்போது, பரமாத்மாவை உணரும் பாக்கியம் ஆன்மாவுக்குக் கிடைக்கிறது. அதனாலேயே, பரந்தாமன், உத்தராயணத்தின் தொடக்கத்தில் சூரிய நாராயணனாகவும், தட்சிணாயனத்தின் முடிவில் கோவிந்தனாகவும் அருள் பாலிப்பதாக ஓர் ஐதீகம் உண்டு. உத்தராயண வாசலை, ஜீவாத்மாக்கள் இப்பூவுலகிற்குள் (குபேரனின் இடம்) நுழையும் வாசலாகவும், தட்சிணாயன வாசலை, மரண லோகத்தின் (யமனின் இடம்) நுழைவாயிலாகவும் எண்ணிக் கொள்ளலாம்.

இக்கோயிலுக்கு 'நாழி கேட்டான்' வாயில் என்று இன்னொரு வாசலும் உண்டு ! ஒரு முறை, தனது தற்காலிக உறைவிடமொன்றுக்குச் சென்று திரும்பிய பெருமாளை மகாலஷ்மி இவ்வாசலில் வழி மறித்து, அவர் தாமதம் குறித்து கேள்வி கேட்டதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. சித்திரை கோடை திருநாள் சித்ராபவுர்ணமியில் கஜேந்திர மோட்சமும், ஆவணி ஸ்ரீஜெயந்தி வீதியடி புறப்பாடும் நடைபெறுகின்றன. பங்குனி திருவோணம் நிட்சத்திரத்தில் பிரமோத்சவம் கொண்டாடப்படுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, September 15, 2006

Kausalya - கல்வி நிதி தொடர்பாக

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

சிரமம் பார்க்காமல், இப்பதிவை முழுவதும் வாசித்து விடவும் என்ற கோரிக்கையோடு,
********************************
கௌசல்யாவின் மருத்துவக் கல்விக்கு பொருள் உதவி வேண்டி நான் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, பல நண்பர்கள் எனக்கு மடல் அனுப்பி, பணம் அனுப்புவதற்கான விவரங்களை கேட்டிருந்தனர். என் வேண்டுகோளை பலரும் வாசிப்பதற்கு வசதியாக, தமிழ்மணம் நிர்வாகம், வேண்டுகோள் பதிவின் சுட்டியை தமிழ்மணம் தளத்தின் முகப்பு பக்கத்தில் ஒரு வாரம் வைத்திருந்தது. இதுவும், சென்ற ஆண்டை விட, இவ்வாண்டு முயற்சிக்கு, அதிகமானோர் ஆதரவு அளித்ததற்கு ஒரு காரணமாய் அமைந்தது. திண்ணையும் எனது வேண்டுகோளை ஓர் அறிவிப்பாக வெளியிட்டிருந்தது. நண்பர் தேசிகனும் இது குறித்து ஒரு பதிவிட்டு இருந்தார். துளசியும் தேசி பண்டிட் தளத்தில் என் வேண்டுகோள் பற்றி எழுதியிருந்தார். தமிழ்மணம் நிர்வாகக் குழுவுக்கும், திண்ணை ஆசிரியர் ராஜாராம் அவர்களுக்கும், தேசிகனுக்கும், துளசிக்கும் நன்றிகள் பல !

இது வரை, என்னை மடல் வழி தொடர்பு கொண்டதின் தொடர்ச்சியாக, பண உதவி அனுப்பியவர்களுக்கும், அனுப்ப உள்ளவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உதவ நினைத்து ஏதோ ஒரு காரணத்தால் பலருக்கு இயலாமல் போயிருக்கலாம். அவர்களுக்கும் என் நன்றி. அடுத்த ஆண்டு முயற்சிக்கு உதவலாம். இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றி. இது வரை, என்னை மடல் வழி தொடர்பு கொண்டவர்கள் மட்டும் நிதியுதவி செய்தாலே, எனது இந்த ஆண்டு முயற்சிக்கு போதுமானது என்று குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த வேண்டுகோளை இனி வாசித்து உதவ நினைக்கும் நண்பர்கள் தங்கள் ஆதரவை எனது அடுத்த ஆண்டு முயற்சிக்குக் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கௌசல்யா தனது மருத்துவப் படிப்பை முடிக்கும் வரை உதவலாம் என்பது என் எண்ணம். இன்னும் சில ஏழை மாணவ / மாணவிகளுக்கு உதவலாம் என்ற எண்ணமுண்டு. எனவே, உங்கள் உதவி எதிர்காலத்தில் தேவைப்படும்.

கடந்த இரு வாரங்களாக, உதவ முன் வந்த நண்பர்களுக்கு மடல் வழி விவரங்களைத் தரவும், பணமாற்றம் குறித்த பிரச்சினைகளைத் தீர்க்கவும், அனுப்பிய தொகை வந்து சேர்ந்தது பற்றி தகவல் அனுப்பவும், கணக்குகளை சரி பார்க்கவும் செலவிட்ட நேரத்தை, மிகுந்த மனநிறைவோடும், உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் செலவிட்ட பணி நேரமாகவே பார்க்கிறேன் !!!

இதுவரை பணம் அனுப்பிய அனைவருக்கும் (ஒருவர் தவிர, யார் அனுப்பியது என்ற விவரம் சரியாக இல்லை!) பணம் வந்து சேர்ந்தது பற்றி மடல் வழி தெரிவித்து விட்டேன். பணம் அனுப்புவதாக ஏற்கனவே மடல் எழுதியுள்ள நண்பர்கள், பணமாற்றம் செய்யும்போது, தங்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடவும். அதோடு, விவரங்களை (தொகை, தேதி, transaction reference நம்பர்) எனக்கு உடனடியாக தெரிவித்தால், யார் அனுப்பியதை என்ற குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

கௌசல்யா, முதலாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறைக்காக ஊருக்குச் சென்றுள்ளார். தேர்வை நன்றாக எழுதியிருப்பதாகக் கூறினார். அவர் சென்னை வந்தவுடன் நேரில் சந்தித்து, அவர் தேவைகளை கேட்டறிந்து, (திரட்டிய கூட்டுத் தொகையைக் கொண்டு) உதவி செய்வதாகக் கூறினேன். பல நல்ல உள்ளங்களிடமிருந்தும் உதவி பெற்று அவருக்கு வழங்குவதை நினைவில் கொண்டு நன்றாக படிக்குமாறு என்னளவில் அறிவுரை தந்துள்ளேன். வாழ்வில் உயரத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது.

அவருக்கு வழங்கியது போக, மீதமிருக்கும் தொகையில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில், 1099/1200 மதிப்பெண்கள் (பத்தாவது தேர்வில் 441/500) பெற்று, RKM பொறியியல் கல்லூரியில் B.E (IT) சேர்ந்திருக்கும் துர்கபிரியா என்ற ஏழை மாணவிக்கு (இவரைப் பற்றியும் விசாரித்து விட்டேன்) வழங்கலாம் என்று எண்ணம். உதவி செய்த நண்பர்களின் ஒப்புதலோடு, இம்மாணவியின் கல்விக்கும் இயன்ற அளவில் உதவிட நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் (பின்னூட்டமாகவோ, மடலாகவோ) தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, தமிழ் வலைப்பதிவு வாயிலாக, ஒரு நல்ல முயற்சி தொடர்ந்து (இரண்டாமாண்டாக) பேராதரவு பெற்றுள்ளது. அதற்கு, பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக ! இது தொடர வேண்டும் என்பது நம் அனைவரின் எண்ணமும் என்று புரிந்து கொள்கிறேன்.
*******************************
என்றென்றும் அன்புடன்
பாலா

* 231 *

அரசியல் கூத்துகள்

சமீப காலத்தில் வாசித்த செய்திகளைச் சார்ந்த சில கேலிக்கூத்துகள், உங்கள் பார்வைக்கு :)

கேலிக்கூத்து 1: கார்கில் போரில் மரணமடைந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீடுகளின் நிலப்பதிவு கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பான கோப்பை, செல்வி ஜெயலலிதா கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கெயெழுத்து இடாமல் வைத்திருந்ததாக கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார் ! இது போலவே, முன்பு இரண்டொரு முறை கலைஞர் குற்றம் சாட்டியபோது, புரட்சித் தலைவி அவற்றை மறுத்து, கலைஞரிடம் ஆதாரம் தருமாறு கேட்டதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள் ! மொத்தத்தில் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டுவதோடு சரி ! எதற்கும் ஆதாரம் தருவதில்லை ! பின் எதற்கு இம்மாதிரி ஸ்டண்ட் எல்லாம் என்று விளங்கவில்லை. சூப்பர் கேலிக்கூத்து ! இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் மக்களை மடையர்கள் என்று நினைக்கிறார்கள் போலும் !!!

கேலிக்கூத்து 2: ஜிப்மரில் (JIPMER) பணி புரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இரு தினங்களுக்கு முன், அங்கு பணி புரியும் செவிலிகள் ஜிப்மர் டைரக்டர் சுப்பராவை சூழ்ந்து கொண்டு, ஜிப்மரை autonomous நிறுவனமாக்கும் மத்திய சுகாதாரத் துறையின் திட்டத்தை கைவிடுதல் குறித்த அரசாணையை, அவர் உடனடியாக பெற்றுத் தராவிடில், அவருக்கும் "வேணுகோபால் கதி" (இதென்ன, 'ராமன் எ·பெக்ட்' மாதிரி வேணுகோபாலை வைத்து ஒரு சொல்லாக்கத்தையே உருவாக்கி விட்டார்கள்:)) ஏற்படும் என்று அச்சுறுத்தியிருக்கின்றனர். ஓரிரு வாரத்திற்கு முன், திரு.ராமதாஸ் ஜிப்மர் சென்று அலுவலர்களை சந்தித்து சமாதானம் பேசியிருக்கிறார். இதில் கேலிக்கூத்து என்னவென்றால், அவரே தன் மகனாகிய அமைச்சரிடம் பேசி, நிலைமை குறித்து ஓர் அறிக்கை விட்டிருக்கலாம் ! அல்லது, திரு அன்புமணியாவது, பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசியிருக்க வேண்டும். நடப்பதெல்லாம் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது ! வேணுகோபால் விஷயத்தில் சுறுசுறுப்பு காட்டியவர்கள் இப்போது மெத்தனம் காட்டுவது ஏனோ ?

கேலிக்கூத்து 3: முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு CPM பாலிட்பிரோவிலிருந்து, உடல்நிலை காரணமாக, விலக விருப்பம் தெரிவித்து விடுத்த கோரிக்கையை பாலிட்பிரோ நிராகரித்து விட்டது. அவருடைய அனுபவமும், அறிவுரையும் கட்சிக்கு மிக அவசியம் என்று கரத் கூறியுள்ளார். ஒரு 93 வயது முதியவர் கட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற நினைக்கும்போது, அதை மதிக்காமல் அவரை நிர்பந்திப்பது நல்ல தமாஷ் ! CPM-இல் அனுபவம் / ஆற்றல் மிக்க ஆட்களே இல்லையா என்ன ? ஜோதிபாசு ஓய்வு பெறுவதில், கட்சிக்கு அப்படி என்ன பிரச்சினை ??? பாலிட்பிரோவில் என்னென்ன உள் பிரச்சினைகளோ, யாருக்குத் தெரியும் ???

எ.அ.பாலா

Wednesday, September 13, 2006

ஆழ்வார் குறிப்பு II - நம்மாழ்வார்

ஆழ்வார்களில் தலையானவர் / முதன்மையானவர் எனக் கருதப்படுவதால் 'நம் ஆழ்வார்' (ஸ்ரீரங்கநாதனே 'என் அடியார்' என்ற பொருளில் இவரை அன்போடு அழைக்கும் பெயரும் கூட) எனப் பெயர் பெற்ற இவர் வேளாள வம்சத்தில் அவதரித்த வைணவ வித்து! இவர் 9-ஆம் நூற்றாண்டில், திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில், பிரமாதி வருடத்தில், வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில் தோன்றியவர். நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்று கூறுவர்.

இவர் தந்தையார் பெயர் மாறன் காரி, தாய் உடைய நங்கையார் என்பவர். நம்மாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன் (சாதாரண மனித இயல்புகளுக்கு மாறானவன் / அப்பாற்பட்டவன் என்று பொருள் கொள்க!). இவ்வாழ்வார், சடகோபன், பராங்குசன், சடாரி, வாகுலபரணன், குருகையூர் கோன் என்றும் அறியப்படுகிறார். இதில் சடகோபன் என்ற பெயருக்குப் பின்னார் ஒரு சுவாரசியமான காரணம் உண்டு !
Photobucket - Video and Image Hosting
'சடம்' என்றால் காற்று. விரிவாக நோக்கினால், பிறக்கும் குழந்தையை 'முந்தைய ஜென்ம வினைகள்' சார்ந்த காற்று சூழும்போது அது குழந்தையின் முதல் அழுகைக்குக் காரணமாகிறது. ஆனால், நம்மாழ்வார் பிறந்ததும் அழவே இல்லையாம். அதனால் சடம் என்னும் காற்றை முறித்ததினால், அவருக்கு சடகோபன் என்ற பெயர் சூட்டப்பட்டது. அது போலவே, திருமாலின் திருவடியின் அம்சமாகக் கருதப்படுவதால், பெருமாளின் சன்னதிகளில் பக்தர்களின் தலையில் வைக்கப்படும் 'சடாரி'யாகவும் இவர் அறியப்படுகிறார். பக்தி என்கிற அங்குசத்தால் அந்த பரந்தாமனை தன் கட்டுக்குள் வைத்திருந்ததால், இவ்வாழ்வாருக்கு 'பராங்குசன்' என்ற காரணப்பெயர் உருவானது !

நம்மாழ்வார் ஓர் அசாதாரண குழந்தையாகத் திகழ்ந்தார். பிறந்த கணத்திலிருந்து குழந்தை கண்களை திறக்கவுமில்லை, எதுவும் உண்ணவுமில்லை. ஆனால், குழந்தை உடல் தேஜஸ¤டனே இருந்தது. பல நாட்கள், குழந்தை எதும் பேசாமலும் இருந்தது. மனமொடிந்து போன பெற்றோர், குருகூர் தெய்வமான ஆதி நாதர் கோயிலுக்குச் சென்று, குழந்தையை (வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு இறைவனிடம் வேண்டி) தரையில் விட்டபோது, அந்த தெய்வக் குழந்தை தவழ்ந்து சென்று கோயிலில் இருந்த புளியமரத்து பொந்தில் நுழைந்தது. அடுத்த 16 ஆண்டுகள், பத்மாசன கோலத்தில், ஆகாரமின்றி, நீரின்றி, அசைவின்றி, கண்மூடி, அந்த சூரியனே மனித உருவில் காட்சியளித்தது போல் பிரகாசத்துடன், அந்த புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வார் யோக நிலையில் வீற்றிருந்தார் !

அந்த கால கட்டத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணியத் தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி என்ற பண்டிதர், அயோத்தியின் தெற்கு வானத்தில் ஓர் அதி அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அப்பேரொளி புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்கு புலப்பட்டது!

தியானத்தில் இருந்த நம்மாழ்வரை பேச வைக்க மதுரகவி அவரை கூப்பிட்டுப் பார்த்தார், சப்தம் ஏற்படுத்திப் பார்த்தார். பலனில்லை ! தானே தண்ணொளி மிகு நிலையில் (state of enlightenment) இருந்த மதுரகவியார், நம்மாழ்வாரிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது. எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குணநலன்களையும் சார்ந்தது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் ! அதாவது, முக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது ! ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம் ! இங்கே, உடல் 'செத்தது' ஆகவும், ஆன்மா 'சிறியது' ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிச் செய்த திவ்யப்பாசுரங்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், பலரும் அறிந்ததே. பிரபந்தத்தில் மதுரகவி ஆழ்வாரின் பங்கு, 'கண்ணி நுண் சிறுதாம்பு' என்ற தலைப்பில் அமைந்த 11 பாசுரங்கள் மட்டுமே. இவை தனது குருவான நம்மாழ்வாரைப் போற்றி பாடியவை. குருகூர் கோயிலில் உள்ள புளிய மரம் 'உறங்கா புளி' என்றழைக்கப்படுகிறது. இந்த புளிய மரம் பூக்கும், ஆனால் காய்க்காது, மற்ற புளிய மரத்தை போல் இரவில் மூடிக் கொள்வதில்லை.

நம்மாழ்வார் நான்கு வேதங்களின் (ரிக், யஜுர் ,சாம, அதர்வண) சாரங்களையும் முறையே, திவ்யப்பிரபந்தத்தில் வரும் திருவிருத்தம் (100), திருவாசிரியம் (7), திருவாய்மொழி(1102) மற்றும் பெரிய திருவந்தாதி(87) ஆகியவற்றில் அமைந்த திவ்யப் பாசுரங்கள் வாயிலாக அருளிச் செய்துள்ளார். திருவாய்மொழி (தெய்வப் பேச்சு) பகவத் விஷயம் என்று அழைக்கப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவாய்மொழிக்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளதற்கு, இராமனுசரும், அவருக்கு பின்னால் வந்த வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் காரணம் என்றால் அது மிகையில்லை. இராமானுசரின் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதியுள்ளார்.

நம்மாழ்வாரை வைணவர்கள் 'தமிழ் வேதம் தந்த ஆழ்வார்' எனப் போற்றுகின்றனர். வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். 'மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்' என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திவ்ய தேசங்கள் 37 ஆகும். இவற்றில் ஸ்ரீரங்கம், திருப்பேர்நகர், திருமாலிருஞ்சோலை, வடக்கிலுள்ள துவாரகை, திருப்பதி, திருக்குடந்தை, திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், தஞ்சை மாமணிக்கோயில், திருமோகூர் குறிப்பிடத்தக்கவை. பாற்கடல் வாழ் அரங்கன், 108 வைணவத் திருப்பதிகளில் கொண்ட திருக்கோலங்களோடு காட்சியளித்தது நம்மாழ்வார் ஒருவருக்கே!!! அதனால் தான் என்னவோ, இவ்வாழ்வார் திருக்குருகூர் கோயிலில் வீற்றிருந்தபடியே, அகக்கண்ணால் கண்ட காட்சிகளை வைத்து, 37 வைணவத் தலங்களைப் பற்றி திருப்பாசுரங்களை இயற்ற முடிந்தது போலும் !!!

நம்மாழ்வர் பாசுரங்களில் பக்திப் பேருவகையும் (ecstasy through devotion) ஸ்ரீவைகுண்டநாதன் மேல் அவருக்கு இருந்த கடலை ஒத்த பேரன்பும் காணப்படுகின்றன. ஒரு சமயம், நம்மாழ்வாரை அருள் பாலிக்க, மகாவிஷ்ணு அலைமகள் சமேதராய், சங்கு சக்ர தாரராய், கருடவாஹன ரூபராய் எதிர் வந்து நிற்க, 'கருமுகில் தாமரைக்காடு பூத்து நீடிரு சுடரிரு புறத்தேந்தி ஏடவீழ் திருவொடும் பொலிய ஓர் செம்பொற்குன்றின் மேல் வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றிய' பெருமாளின் திருவடி பணிந்து நம்மாழ்வார் ஆனந்தப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தார்.

பிறிதொரு சமயத்தில், நம்மாழ்வார் திருமாலை தனது பேரானந்த (அனுபூதி) நிலையில், "வேரும் வித்துமின்றித் தானே தன்னிலையறியாத் தொன் மிகு பெரு மர" என்று வியக்கிறார்! இங்கு திருமாலை மரமாக உருவகிக்கிறார். தொன் மரம் என்பதை - கால வரையறைக்கு உட்படாதது (timeless) என்றும், மிகு மரம் என்பதை வெளியின் வரையறைக்கு உட்படாதது (beyond space limitation) என்றும் பெரு மரம் என்பதை உருவ அளவுகளைக் கடந்தது (immeasurable) என்றும் கொள்ள வேண்டும் ! அதாவது பரம்பொருள் என்பது கால, வெளி அளவுகளைக் கடந்த ஒன்று என்பதைச் சொல்கிறார். தன்னை நாடி வந்தோர்க்கு, நல்லவர், தீயவர், எளியோர், பெரியோர் என்று பேதம் பாராமல் தண்ணிழலும், பழங்களும் தருவது மரத்தின் இயல்பாவது போல, மனித உயிர்கள் அனைத்தையும் அரவணைத்து பரமபதம் சேர்த்துக் கொள்வது வைகுந்தனின் குணமாகிறது.

ஆழ்வார் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார். நம்மாழ்வார் திருப்பேர் நகரில் மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. திருவாய்மொழியின் இறுதியில் இவர் பாடிய பாசுரங்கள், இத்திருத்தலம் மற்றும் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பற்றியதே. நம்மாழ்வார் 'அர்ச்சராதி கதி' வாயிலாக பரமபதம் சேரவிருப்பது திருவாய்மொழியில் சொல்லப்பட்டுள்ளது ! திருப்பேர் நகர் பெருமானாகிய அப்பக்குடத்தான் மார்க்கண்டேயருக்கு இறவா வரம் தந்ததால், இத்தலத்தில் இருக்கும் தீர்த்தம் (குளம்) மிருத்யு விநாசினி என்றழைக்கப்படுகிறது.

சாம வேதத்தின் சாரமான திருவாய்மொழியிலிருந்து சில பாசுரங்களைக் காணலாம்.

****************************
வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.


வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்ட, குறும்புகள் பல செய்த, கோள்கள் பல சொன்ன, பொல்லாதவனே! அமுதத்தை ஒத்த வான் அரசனே! என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னை சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும், அரக்கர்களை அழிக்கவும் உனை வேண்டினேன். உன்னிடம் வந்தடைந்த என்னை அழுத்தமாகப் (சிக்கென) பற்றிக் கொள்வாயாக!

*****************************
அடுத்து, உயரிய கருத்தைக் கொண்ட ஆழ்வாரின் இப்பாசுரத்தில், சாதி மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதை காண முடிகிறது. அதாவது, பல வழிகளிலும் பரம்பொருளை அடைய முடியும் என்ற தத்துவத்தை சொல்கிறது !

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே.


அவரவர் தாங்கள் அறிந்த வகையில், தங்கள் கடவுளர் என்று பல வகைப்பட்ட தெய்வங்கள் முன் அடி பணிந்து தொழுகின்றனர். அவரவரின் கடவுளர்களும் குறையில்லாதவர்களே. அவரவர் விதிமுறைகளின் வாயிலாக அக்கடவுளர்களிடம் சென்றடைய அவர்கள் வணங்கி நிற்கின்றனர் !

*****************************
அடுத்து, வானவியலொட்டிய ஒரு நுட்பமான விஷயத்தை, ஒரு பாசுரத்தில் சொல்லியிருக்கிறார் !

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கும் ஒலிகடல்
மாறு சுழன்று அழைக் கின்ற ஒலிஅப்பன்
சாறு படஅமு தம்கொண்ட நான்றே. 7.4.2


மேலோட்டமாக பொருள் எடுத்தால், இப்பாசுரம் திருப்பாற் கடலை அமுது கடைந்த போது உண்டான ஒலிகளைப் பற்றிப் பேசுகிறது. அதாவது பேரொலிகள், வாசுகி என்னும் பாம்பு மந்தரம் என்னும் மலையுடன் உரசும் போது உண்டானது குறித்து பேசுகிறது.

அவரது மிகப் பிரம்மாண்டமான சித்தரிப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், நம்மாழ்வார் சாதாரண மத்து கடைதலைப் பற்றி பேசவில்லை என்பது! ஓடும் நதியை, புவியீர்ப்பு விசை¨க்கு எதிராக திருப்ப்¢ மலைகளை நோக்கி ஓட வைக்க வேண்டுமெனில் எப்பேற்பட்ட பெரும் சக்தி கொண்டவையாக அப்பேரொலிகள் இருந்திருக்க வேண்டும்! பால்வெளியானது நெளிந்து ஓடும் ஒரு ஓடையை போன்றது என்று தெளிந்திருக்கிறோம். "கடல் மாறு சுழன்று" எனும்போது திருப்பாற் கடலே மாறுபட்டு சுற்றியதாகச் சொல்கிறார். சூரிய மண்டலத்தின் சுழற்சி பற்றி அப்போதே சொல்லியிருக்கிறார். பால்வெளியின் சுழற்சி வேகத்தை தாக்குப் பிடிக்க சூரிய மண்டலம் மட்டும் விநாடிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பால் வெளியின் உள் நோக்கிப் பாய்கிறது. நம்மாழ்வார் பேசுவது இந்த சுழற்சியைப் பற்றி!
********************************
இன்னும் சில திருவாய்மொழிப் பாசுரங்களின் பெருமை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

நம்மாழ்வார் படத்திற்கு நன்றி: தேசிகன்

Sunday, September 10, 2006

குஷ்பு as மணியம்மை

இது குறித்து எழுத நினைத்து, நேரமின்மையால் இப்போது தான் பதிகிறேன்.

சமீபத்திய குமுதம் இதழில், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், மீண்டும் காரசாரமாக, குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்து பேசியிருக்கிறார் ! ஒருவர் மனைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருப்பவரை 'சிங்காரி குஷ்பு' என்று நாகரீகமாக வர்ணிப்பது தான் தமிழ் பண்பாடு போலும் ! இதற்கு முன், ஒரு பேட்டியில் (இட்லி வடை பதிவில் உள்ளது) குஷ்புவைப் பற்றி 'மும்பையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்தவர்', 'ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தவர்' என்றும், இன்ன பிறவும் கூறியவர். இவர் சம்பளம் வாங்காமல் தான் மக்கள் சேவை செய்கிறார் போலும் ! குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்துப் பேசுவது ஒருவரின் உரிமை தான் என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் கண்ணியம் தவறி இப்படிப் பேசுவது நிச்சயம் சரியில்லை. இப்பிரச்சினையில், அரசியல் கட்சி என்ற வகையில், பா.ம.க வின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. டாக்டர் ராமதாஸ் இப்பிரச்சினை குறித்து கருத்து எதுவும் கூறினாரா என்றும் தெரியவில்லை.

குஷ்பு மணியம்மையாக நடித்தால் தமிழ் சமுதாயத்திற்கே கேடு என்பது போல் வேல்முருகன் பேசியிருக்கிறார் ! ஏற்கனவே, கீரன் ஒரு பின்னூட்டத்தில் 'நடிப்பு வேறு, நடிப்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை / கருத்து வேறு' என்று அழகாகக் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம், எதிர்ப்பவர்கள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை, எண்ணியும் பார்க்க மாட்டார்கள் ! ஏதாவது ஒரு கலாட்டா செய்வது இவர்களுக்கு வாடிக்கையாகிப் போன ஒன்று. குஷ்பு மணியம்மையாகவோ மார்கிரெட் தாட்சராகவோ நடிப்பது பற்றிய பிரச்சினையை விட, சட்டமன்ற உறுப்பினர்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் அனேகம் உள்ளன. சமூகத்தின் பல தளங்களில் ஒரு பாசிச மனப்போக்கு விரவியிருப்பதே, இது போன்றவற்றுக்கு ஆதாரம்.

குஷ்பு மணியம்மையாக நடிப்பதை தமிழ் சமுதாயமே ஏற்காது என்று கூறுபவர்களுக்கான பதில், சாதாரண பொதுமக்கள் இது குறித்து விசனப்படவும் இல்லை, போராட்டம் என்று களத்தில் குதிக்கவும் இல்லை என்பதே ! மக்கள், தங்கள் வாழ்வு குறித்த வேறு பல பிரச்சினைகளை தினம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது ! சில பத்திரிகைகள் தான் இது பற்றி வலிய எழுதியும், பேட்டி எடுத்தும் விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி குட்டையைக் குழப்புகின்றன என்றும் தோன்றுகிறது.

ஓரிரு மாதங்களுக்கு முன் தான், பெரியார் படத்திற்கு அரசு மானியம் வழங்குவது தொடர்பாக எழுந்த பிரச்சினை அலையடித்து ஓய்ந்தது. இப்போது இது ! என்னத்த சொல்ல! நடக்கும் கூத்தைப் பார்த்தால், பெரியார் உயிரோடு இருந்தால், தலையிலடித்துக் கொண்டிருப்பார் ! திரு. வேல்முருகன் தமிழ்நாட்டுப் பெண்கள் யாருமே கற்போடு இல்லை என்று குஷ்பு பேசியதாகக் (குமுதம் இதழில்) கூறியிருப்பது, exaggeration அன்றி வேறென்ன ? பிரச்சினையை லேசில் அடங்க விட மாட்டார்கள் போல் இருக்கிறது. இப்பிரச்சினையில் சீமானும், சத்யராஜும் பாராட்டப்பட வேண்டியவர்கள். குஷ்பு பாத்திரத்திற்கு ஏற்றவர் என்றும், தேர்ந்த நடிகை என்றும் வெளிப்படையாகக் கூறியிருப்பது ஆறுதலான விஷயம். திருமா ஆதரவு / எதிர்ப்பு என்று எந்த நிலையையும் எடுக்காமல் நடுநிலையாக ஏதோ பேசி விட்டுப் போய் விட்டார்.

மணியம்மையாக யார் நடிப்பது என்று தீர்மானிப்பது (அரசு மானியம் தந்திருந்தாலும் கூட !) ஞான ராஜசேகரன் என்ற சிறந்த படைப்பாளியின் கலைச் சுதந்திரம் ! அதில் தலியிட எவருக்கும் உரிமையில்லை. அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பெரியார் படத்து பாத்திரப் படைப்புகளைப் பற்றியும், படமெடுப்பது குறித்தும், பலவும் சிந்தித்து அயராது செயல்பட்டு வருபவர். முக அமைப்பு, நடிப்பாற்றல் போன்றவற்றை ஆய்ந்து நடிக / நடிகையரை தேர்வு செய்து வருகிறார். இது போன்ற அனாவசியப் பிரச்சினைகள் அவரை சோர்வடைய வைத்து, படமெடுப்பதை பாதிக்கும்.

பிரச்சினைக்காக பின் வாங்காமல் தான் பெரியாரின் மனைவியாக நடித்தே தீருவேன் என்றும், மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்றும் குஷ்பு (குமுதத்தில்) பேசியிருப்பது அவரது மனவுறுதியை காட்டுகிறது. குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்ப்பதின் ஆதாரம் ஆணாதிக்க மனோபாவமின்றி வேறெதுவும் இல்லை ! பெண்ணியம் பேசுபவர்கள் / இயக்கங்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து தீவிரமாக எதிர்த்தாலொழிய இது போல் வேண்டாத பிரச்சினைகளை எழுப்புபவர்கள் ஓய மாட்டார்கள்.

எ.அ.பாலா

* 228 *

Saturday, September 09, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 11

சில SPB பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. பௌர்ணமி நேரம் இரவில் ஆடும் ஒளி தீபம் ...

2. செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி, உயிரோடு சேரும் சுருதி ...

3. உறவுறுவாள் என தானோ மனதை ....

4. தங்கப்பூவே சந்திப்போமா, சந்தித்தாலும் சிந்திப்போமா ?

5. காலம் என் பேரை பேசும்போது வாழ்வு எனது வாசல் ...

6. வாழ்ந்திடத் தான் பொறந்தாச்சு, வாசல்கள் தான் ...

7. இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம், கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே ...

8. ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம் ...

9. ஆத்தோரம் பூங்கரும்பு, காத்திருக்கும் சிறு எறும்பு, அக்கரையில்...

10. கல்லுச்சிலை போல் நீ நிற்க வேண்டும், கண்கள் பார்த்து தலை வார வேண்டும்...

11. இளமையின் கனவுகள் கண்ணோரம் துளிர்...

12. சேலை காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட...


என் நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

இடஒதுக்கீடு அமல் - 4

இத்தனை வருடங்களில், மிகச் சில அரசுப் பள்ளிகளே, தரமானவை என்று கூறத்தக்க அளவில் உள்ளன. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் (முக்கியமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!) இயன்ற அளவில், அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துக் கொள்வதன் மூலம், ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த அடிப்படைக் கல்வியை தர இயலும். மேலும், அரசும், பெரு நிறுவனங்களும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனிப்பள்ளிகளே கூடத் தொடங்கலாம்.

இதனால், அம்மாணவர்கள் பிற எலீட் மாணவர்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டிய அவசியமின்றி, நன்றாகப் படித்து, உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான திறனை, தங்கள் உழைப்பால் பெற வல்ல சாதகமான சூழலும் அமையும். தனியார் நிறுவனங்களில் வேலையில் இடஒதுக்கீடு என்பதை விட இது எவ்வளவோ மேல் என்பது என் கருத்து !!! பெண்கல்வி பின் தங்கியிருந்த காலகட்டத்தில், பெண்களுக்காகவே பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. அதனால், நல்ல பலனும் கிட்டியது. அது போலவே, ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கென பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்குவது நிச்சயம் பலனளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகள் சமூகத்தில் நிலவுவதை மறுக்க இயலாது. அதனால் நிகழும் வன்முறையையும், அவமானங்களையும், நம் சமூகத்திலிருந்து முற்றாக விலக்க நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் தான் ! அதே நேரத்தில், இடஒதுக்கீட்டுக்குள் இருக்கும் / இருக்க விரும்பும் எல்லா தரப்பினரும் ஒரே மாதிரியான அளவில், சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவிப்பதில்லை என்பதும் உண்மை தானே ! சமூகத்தில் எல்லா வகையிலும் பின் தங்கியுள்ள ஒரு சாராரின் முன்னேற்றத்திற்கு வேண்டி ஏற்படுத்தப்பட்ட (இடஒதுக்கீடு தரும்) ஒரு திட்டம், அரசியல் தரகர்களால், தற்போது எண்ணிக்கை விளையாட்டாய் மாறி விட்டது கொடுமை தான் ! அதாவது, சாதிகளும் இருக்கின்றன, சாதி அரசியலும் மென்மேலும் பலமடைந்து வருகிறது.

தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது சாதி பேதமில்லா சமுதாயம் என்ற இலக்கு ஒரு மிக நீண்ட கனவு என்று தான் கூற வேண்டும். நம் நாட்டில் கல்வி குறித்த அனைத்து விவாதங்களும், அரசியல்வாதிகளின் சுயநலத்தால், இடஒதுக்கீடு என்ற ஒன்றை நோக்கியே பாய்வது சரியானதா ?? ஏனெனில், இடஒதுக்கீடு (மட்டுமே!) சமூக நீதிக்கு தீர்வாக அமைய முடியாது.

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: அனானிகளும் பின்னூட்டமிடலாம் !

இடஒதுக்கீடு அமல் - 3

உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறப்படும் நிலையில், சற்று பின்னோக்கிப் பார்ப்போம். ஐஐடிகளில் 1973-இல் (டோண்டுவை பொருத்தவரை, சமீபத்தில்!) SC / ST மாணவர்களுக்கு 22.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தபோது , JEE தேர்வில் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கும், Chandy கமிட்டியின் பரிந்துரைப்படி, சீட்டுக்கள் வழங்கப்பட்டன. அவர்களில் எல்லோருமே, பின் தங்கிய கிராமங்களிலிருந்து, நூலகமோ, ஆய்வுக்கூடமோ இல்லாத தரமற்ற பள்ளிகளில் படித்தவர்கள். அனைவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர் என்பதைக் கூறத் தேவையில்லை ! அம்மாணவர்களை (அடுத்த ஆண்டுக்கான) முதலாண்டு பொறியியற் கல்விக்கு தயார்படுத்த வேண்டி, ஒரு வருட தனிப்பயிற்சி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஒரு வருடத்திலேயே அம்மாணவர்களில் பலர் வெளியேறி விட்டனர். மிச்சமிருந்தவர், ஐஐடிகளில் அனுமதிக்கப்பட்டு, படாத பாடு பட்டனர். இறுதியில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச்சிலரே பட்டப் படிப்பை முடித்தனர் !

மேற்கூறியதை வைத்துப் பார்க்கும்போது, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு அரசின் கடமை முடிந்து விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது ! இது போல கல்லூரி படிப்பை முடிக்காமல் வெளியேறும் தலித் மாணவர்களை அரசு துளியும் கண்டு கொள்வதில்லை. மேலும், ஐஐடிகளிலும் இன்னும் சில கல்லூரிகளிலும், விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழலில், அரசு அப்போது நிர்ணயித்திருந்த (இலவச வசதி பெறுவதற்கான) வருவாய் வரம்பு மிகக் குறைவானதாக இருந்ததால், மிகச்சிலரே இலவசக் கல்விக்கு தகுதி பெற்றவராய் இருந்தனர் ! மற்ற மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு என்பது அவர்கள் வாழ்வில், எல்லா வகையிலும் பெரும் போராட்டம் தான் ! இச்சூழலில், ஒரு தலித் மாணவர் கூட, இதுவரை பொதுப்பிரிவில், சீட் பெறவில்லை என்பது தான் சுடும் உண்மை !!! அதாவது, பொதுப்பிரிவிலுள்ள சீட்டுகளை ஒதுக்கப்பட்டவர் எடுத்துக் கொள்கின்றனர் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது சரியில்லை.

சீட்டுகளின் எண்ணிக்கையை (பொதுப்பிரிவு பாதிக்காத வகையில்!) உயர்த்துவதோ, ஆசிரியர்களின் சம்பளத்தை / ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதோ இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பது நிதர்சனம். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைபவர்களின் (அறிவியல், கணிதம் போன்றவற்றில்) அடிப்படை அறிவு பலமாக இருத்தல் அவசியம். அதனாலேயே, எட்டாவது வகுப்பிலிருந்தே, பின் தங்கிய கிராமப்புறச் சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி தருவதும் அவசியமாகிறது.

"கல்வி ஓர் அடிப்படை உரிமை" என்பதை உணரவே, சுதந்திரத்திற்குப் பின், நமக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்படியும், எந்த அரசும், இதற்காக, உருப்படியாக எதையும் செய்ய முன் வரவில்லை. அடிப்படைக் கல்வியின் (Primary/Secondary education) தரத்தை மேம்படுத்த பைசா செலவழிக்க விரும்பாத அரசு, மாறாக, "உயர்" கல்விக்காக (சீட்டுகளை அதிகப்படுத்துவதன் தொடர்ச்சியாக!) ஆயிரமாயிரம் கோடிகளை இறைக்க தயாராக உள்ளது பெரிய கேலிக் கூத்து ! இந்த அணுகுமுறை சரியானதா / பலன் தருமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாய் தொக்கி நிற்கிறது ?

படிக்க விரும்பும் எல்லாருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்க வல்ல சூழலை அரசால், மிக நிச்சயமாக உருவாக்க இயலும். ஆனால், அதற்கு, அரசு தன் வருவாயை (பணக்காரர்களுக்கு சலுகைகள் வழங்குவதையும், பெரு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிப்பதையும் நிறுத்திக் கொண்டு) பெருக்கிக் கொள்வதும் அவசியமாகிறது !

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, September 07, 2006

கௌசல்யாவின் கல்விக்கு உதவி வேண்டி - 2

நண்பர்களே,

நான் எனது பதிவில் விடுத்த வேண்டுகோளின் தொடர்ச்சியாக, உங்களில் பலர் உதவ முன் வந்து, எனக்கு தனிமடல் அனுப்பியதற்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனிமடல் அனுப்பிய அனைவருக்கும் பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கிக் கணக்கு / என் முகவரி ...) தெரிவித்துள்ளேன்.

நிதியுதவி அனுப்புவது தொடர்பாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உள்நாட்டிலிருந்தோ / அயல்நாட்டிலிருந்தோ எனது அல்லது ராம்கியின் வங்கிக் கணக்குக்கு Direct transfer மூலம் பணம் அனுப்புபவர்கள், தயவு செய்து, பணமாற்றம் செய்யும்போது, உங்கள் பெயர் transaction-இல் தெளிவாக தெரியுமாறு பார்த்துக் கொள்ளவும். அத்துடன், எங்களுக்கு மின்மடல் வாயிலாக, பணமாற்று விவரங்களை, அதாவது, அனுப்பியவர் பெயர், தொகை, அனுப்பிய தேதி, பணமாற்று எண் (transaction reference number) எங்களுக்கு மறக்காமல் தெரியப்படுத்தவும். தொகை எங்கள் வங்கிக் கணக்குக்கு வந்தவுடன், உடனே உங்களுக்கு மடலிடுகிறேன். இதன் மூலம் குழப்பங்களைத் தவிர்க்க இயலும்.

அது போலவே, என் முகவரிக்கு செக் அல்லது DD அனுப்புபவர்களும், அனுப்பிய கையோடு எங்களுக்கு விவரங்களை தனிமடலில் அறியத் தரவும்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, September 06, 2006

திவ்ய தேசம் - 2 திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)

************************
இவ்வைணவ திவ்ய தேசம், உத்தமர் கோயில் (அல்லது பிட்சாண்டர் கோயில்) என்ற கிராமத்தில், திருச்சிக்கும் விழுப்புரத்துக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் அமைந்துள்ளது. திருவரங்கத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.

புருஷோத்தமன் என்றறியப்படும் இக்கோயிலின் மூலவர், கிழக்கு நோக்கி புஜங்க (பாம்பின் மேல்) சயனத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார். மஹாவிஷ்ணு, புஜங்க சயனத்தில் 20 திவ்ய தேசங்களில் காட்சி அளிக்கிறார். தாயார் பூர்வதேவி மற்றும் பூர்ணவல்லி என்று அழைக்கப்படுகிறார். வாழை மரத்தை இத்திருத்தலத்தின் தலவிருட்சம் எனப்படுகிறது. இந்த திருக்கோயிலுக்கு நேபஷேத்திரம் மற்றும் ஆதிமபுரம் என்ற பெயர்களும் உண்டு. இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) உத்யோக விமானம் மற்றும் கத(ர)ம்ப தீர்த்தம் எனப்படுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியின் ஆறாம் திருமொழி - கைம்மானத்தில் காணப்படும் பாசுரத்தில் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அப்பாசுரம் இதோ:

Photobucket - Video and Image Hosting

1399@..
பேரானைக்* குறுங்குடி எம்பெருமானை*திருதண்கால்
ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*முத்திலங்கு
காரார் திண்கடலேழும்* மலையேழ் இவ்வுலகேழுண்டும்*
ஆராதென்றிருந்தானைக்* கண்டது தென்னரங்கத்தே (5.6.2)



இக்கோயிலின் விசேஷம், மும்மூர்த்திகள் எனப்படும் சிவனுன், விஷ்ணுவும், பிரம்மனும் ஒரே இடத்தில் தங்கள் துணைவியருடன் எழுந்தருளியிருப்பது தான் ! அதனாலேயே, இக்கோயில் கதம்ப ஷேத்திரம் எனப்படுகிறது. இங்கு கிடைக்கும், (அரிதாகக் காணப்படும்) நாகலிங்கப்பூ கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணு, மகாலஷ்மி தவிர, சிவன், பார்வதி (வடிவுடையம்மன்), பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு தனி சன்னதிகள் இங்கு உள்ளன. மேலும், ஆண்டாள், வரதராஜர், வேணுகோபாலன், ராமர், விநாயகர், நடராஜர், சுப்ரமணியர், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இக்கோயிலில் சன்னதிகள் இருக்கின்றன.

பரமசிவன் குடும்பத்தோடு, பிட்சாதன மூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது, விசேஷமாகக் கருதப்படுகிறது. திருவரங்கம் கோயில் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டபோது, திருமங்கையாழ்வார் இங்கு தங்கியிருந்து தான் திருப்பணிகளை பார்வையிட்டார். பாண்டிய மற்றும் சோழ காலத்து கல்வெட்டுகளை இக்கோயிலில் காணலாம்.

ஒரு முறை, கோபத்தில் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தபோது, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாகவும், மகாலஷ்மியிடம் பிட்சை பெற்றதன் மூலம், சிவனுக்கு விமோசனம் கிடைத்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. மற்றொரு பழங்கதை, மகாவிஷ்ணு இவ்விடத்தில் கதம்ப மர வடிவில் நின்றதாகவும், பிரம்மன் அவரை வழிபட்டதாகவும், பிரம்மனின் கமண்டல நீர் கதம்ப ஆறு என்ற பெயரில் ஓடியதாகவும், பின்னாளில் காதம்ப முனி இங்கு விஷ்ணுவை வழிபட்டதாகவும் கூறுகிறது.

புருஷோத்தமப் பெருமானின் பிரம்ம உத்சவம் சித்திரை மாதத்திலும், சிவபெருமானுக்கான உத்சவம் வைகாசி மாதத்திலும் நடைபெறுகின்றன. மாசி மாத உத்சவ சமயம், ஸ்ரீரங்கத்தின் உத்சவ மூர்த்தி கதம்ப தீர்த்தத்தில் எழுந்தருள்கிறார்.
***************************
என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, September 04, 2006

கௌசல்யாவின் கல்விக்கு உதவி வேண்டி

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!

சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பைத் தொடங்கிய கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு உதவும் நோக்கத்துடன், என் பதிவு பிரமிக்க வைக்கும் கௌசல்யா வாயிலாக நான் வெளியிட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக, பல வலையுலக நண்பர்கள் பண உதவி செய்தனர். கிட்டத்தட்ட 30000-க்கும் மேலாக பணம் திரட்ட முடிந்தது.

கௌசல்யாவை சந்தித்துப் பேசுவதற்கும், அவருக்காக திரட்டிய தொகையை அவரிடம் வழங்குவதற்கும், கௌசல்யாவைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்டிருந்த டெக்கான் குரோனிகளின் செய்தி சேகரிப்புத் துறையின் தலைவர் திரு.பகவன் சிங் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பு பற்றிய என் பதிவு இது: 'சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும்'.

அப்பதிவிலேயே, கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருடைய கல்விக்கு, நம்மால் இயன்ற உதவியை செய்வது குறித்து கோடிட்டு இருந்தேன். அதனால், நம் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக, மீண்டும் ஓர் உதவித்தொகையை திரட்டி, இம்மாணவியின் படிப்புச் செலவுக்கு தொடந்து வழங்கலாம் என்ற எண்ணத்துடன், பண உதவிக்கான இந்த வேண்டுகோளை, உங்கள் முன் மீண்டும் வைக்கிறேன். உங்களால் இயன்ற தொகையை (அது சிறியதாக இருந்தாலும்) உதவியாக அளிக்குமாறு உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கல்விக்கான "பொது உதவி" நிதியாகவும் உங்களால் இயன்றதை வழங்கலாம்.

முதலில் கௌசல்யாவிடம், அவரது முதல் வருட மருத்துவப் படிப்பு குறித்தும், உடனடியாக சமாளிக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் பேச இருக்கிறேன். கணிசமான ஒரு தொகை திரண்டவுடன், பகவன் சிங் அவர்கள் மூலம் கௌசல்யாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, உதவிக் தொகையை (அவருக்கு சரியான வகையில் பயனளிக்கும் விதமாக) சேர்ப்பிப்பதற்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.

சென்ற வருடம், பணம் தந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும், இவ்விஷயத்தில் உறுதுணையாக இருந்த அருமை நண்பன் 'ரஜினி' ராம்கிக்கும், திரு.டோண்டு ராகவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!

உதவிய நண்பர்கள் விவரம்:
'கடலோடி' பரணீ, ரம்யா நாகேஷ்வரன், ஜெயஸ்ரீ(US), முகமூடி, துளசி, சொ.சங்கரபாண்டி, திருமலை, சலாவுதின் பஷீர், 'டோண்டு' ராகவன், குழலி, ஈஸ்வர பிரசாத், மோகன் அண்ணாமலை, 'ரஜினி' ராம்கி, 'அரட்டை அரங்கம்' வீ.எம் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அன்பர்.


அனைத்து நண்பர்களுக்கும்:
****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.

balaji_ammu@yahoo.com
ramki@rajinifans.com
balaji.ammu@gmail.com
rajni_ramki@yahoo.com

இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டாலே போதும். நான் / ராம்கி உங்களுக்கு பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் எங்கள் முகவரி) தெளிவாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

**********************************

என்றென்றும் அன்புடன்,
பாலா

Saturday, September 02, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 10

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

**************************



1. தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த் தென்றல் என்னைத் தொடலாம்

2. கலையாத மோகனச் சுவை நான் ...

3. மகிழ்வார், சுகம் பெறுவார், அதிசயம் காண்பார்

4. புன்னகை வீசி ஆறுதல் கூற அருகில் ....

5. இச்சைக் கிளியாய் மாறுவேன், என்றும் உன்னை நாடுவேன்

6. அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்

7. மை வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன

8. மனக்கோயில் வாழ வந்த தெய்வீகப் பெண் என்பதோ

9. திக்கி திக்கிப் பேசுவது குயில் போலே

10. பாடும் உள்ளம் துள்ளத் துள்ள பாடல் ஒன்று ...

11. விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள் புரியாதோ ...

12. முடியும்போது தொடங்கும், நீ தொடங்கும்போது முடியும்


*******************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

ஆழ்வார் குறிப்பு I - திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் (திருக்கோழியில்) கார்த்திகை மாதத்தில், ரோகினி நட்சத்திரத்தில் ஸ்ரீவத்ஸ அம்சத்தில் (நாராயணனின் திருமார்பில் உள்ள மச்சக்குறி) 8-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். இவரது பெற்றோர், பணி குறித்து தகவல் எதுவும் இவரது வாழ்வுக் குறிப்பில் இல்லை. இவ்வாழ்வாருக்கு முனிவாகனர், யோகிவாகனர், கவீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு.
Photobucket - Video and Image Hosting
குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி வளர்க்கப் பட்டவர். அவர் புகுந்த குலத்தில் பிரசத்தி பெற்ற யாழ் இசையில் சிறு வயதிலேயே மிகுந்த தேர்ச்சி பெற்றதனால், 'பாணர்' என்றே அழைக்கப்பட்டார். அவர் யாழைத் தொட்டபோதெல்லாம், அதிலிருந்து கேட்டவர் மனதை உருக்கும் இசை வெளிப்பட்டது !

ஸ்ரீரங்கத்துப் பெருமானின் மீது அளவிலா பக்தியின் வெளிப்பாடாக, இரவும் பகலும், காவிரிக் கரையில் நின்று, யாழை மீட்டி, கோபுரத்தை பார்த்தபடி (அவர் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர் என்று கூறி உயர்சாதியினர் கோயிலுக்குள் அவரை அனுமதிக்காத காரணத்தால்) இனிமையாகப் பாடுவதை செய்து வந்தார். காவிரிக் கரையின் மணற்குன்றுகளில் உறங்குவார். அவருக்கு ஸ்ரீரங்கநாதரைத் தவிர உறவினர் யாரும் கிடையாது !!! உயர் குலத்தவர் (என்று தங்களை எண்ணிக் கொண்டவர்!) அவர் ஸ்ரீரங்கத்து தெருக்களில் கூட, தான் வருவதை முன் கூட்டியே அறிவித்த பின் தான், உலவலாம் என்று கட்டளையிட்டிருந்தனர் !

திருப்பாணாழ்வார் முக்தியடைந்தது குறித்து சுவையான நிகழ்வு ஒன்று பண்டைய குறிப்புகளில் சொல்லப்படுள்ளது !

ஒரு சமயம், அவர் காவிரியின் தென்கரையில் நின்றபடி, அரங்கநாதரே பேருவகை கொள்ளும் வண்ணம், அற்புதமாக பல நாட்கள் பாடிக் கொண்டு இருந்தார். அங்கு வந்த, ஸ்ரீரங்கத்தில் இறைசேவை செய்து வந்த லோகசாரங்கமுனி என்ற அந்தணர், அவரை எட்டிச் செல்லுமாறு பலமுறை பணித்தார், அரங்கனின் பக்தியில் திளைத்து, மோன நிலையில் நின்ற ஆழ்வார் அதைப் பொருட்படுத்தவில்லை.

சினமுற்ற லோகசாரங்கர், பாணர் மீது கல்லெறிய, அது ஆழ்வாரின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. கண் விழித்த ஆழ்வார், தன் செய்கைக்கு லோகசாரங்கரே வெட்கும் அளவில், மன்னிப்பு கேட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார். லோகசாரங்கரின் இச்செய்கையால், திருவுள்ளம் கலங்கிய, கோயிலில் எழிந்தருளிய ஸ்ரீரங்கப் பெருமானின் திருநெற்றியில் குருதி பெருக்குற்றதைக் கண்டு, லோகசாரங்கர் துணுக்குற்றார். இரவில் தூக்கமின்றித் தவித்தார்.

அவரது கனவில் தோன்றிய அரங்கன், ஆழ்வார் தன்னை தரிசிக்க வந்தாலொழிய, தனது கோயில் கதவுகள் திறக்கப்பட மாட்டாது என்றும், ஆழ்வாரை எப்பாடு பட்டாவது தன் முன் கூட்டி வருவது தான் லோகசாரங்கர் செய்த பெரும்பாவத்துக்கு பிராயசித்தம் என்றும் கூறி மறைந்தார். முற்றும் மனம் திருந்திய லோகசாரங்கமுனி காவிரிக்கரைக்கு ஓடி, கோயிலுக்கு வருமாறு பாணரிடம் மன்றாடிக் கேட்டார். பாணரோ கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க மறுக்க, மிகுந்த நிர்பந்தத்தின் முடிவில், லோகசாரங்கமுனி ஆழ்வாரை தன் தோளில் சுமந்து கோயிலுக்குக் கூட்டி வந்தார். இதனால் தான், இவர் 'முனிவாகனர்' என்றும் அறியப்படுகிறார்.

திருமாமணி மண்டபத்தில் வீற்றிருந்த அரங்கநாதப் பெருமான் முன் வந்திறங்கிய திருப்பாணாழ்வார், அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது!!! இந்த பத்து பாசுரங்களில் அரங்கனை, திருப்பாதத்தில் தொடங்கி திருக்கிரீடம் வரை, மிக மிக அழகாக பக்திப் பெருக்கோடு வர்ணித்திருக்கிறார். "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று அமலனாதிபிரானை நிறைவு செய்த திருப்பாணாழ்வார், அரங்கனின் அடி பற்றி அக்கணமே திருவரங்கப் பெருமானுடன் ஒன்றறக் கலந்தார் !!!

அமலனாதிபிரான் உங்கள் வாசிப்புக்கு:

927@..
அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்-
கமல பாதம் வந்து
* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (2) (1)

928@
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே. (2)

929@..
மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்தி போல் நிறத்து ஆடையும் *அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2) (3)

930@
சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,*திருவயிற்று-
உதர பந்தம்*
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ*
அடியேனை ஆட்கொண்டதே. (5)

932@
துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர்
*அடியேனை உய்யக்கொண்டதே. (6)

933@
கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

934@
பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்*
என்னைப் பேதைமை செய்தனவே. (8)

935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ.
* நிறை கொண்டது என் நெஞ்சினையே. (2) (9)

936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே
. (2) (10)

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, September 01, 2006

SPB பாடிய தாலாட்டு !

பாடல்: இது குழந்தை பாடும் தாலாட்டு

படம்: ஒருதலை ராகம்

பாடியவர்: பாலசுப்பிரமணியம்

பாடலாசிரியர்: T ராஜேந்தர்


இப்படத்தை அண்ணாசாலை அலங்கார் திரையரங்கில் பார்த்ததாக நினைவு ! படத்தில் டூயட் பாடல்கள் கிடையாது, எல்லாமே ஆண் மட்டுமே பாடும் பாடல்கள். அலங்கார் இப்போது இல்லை !

ஒருதலைக் காதலை, அழகான இசையுடன் கூடிய எளிமையான பாடல் வரிகளில், வெளிப்படுத்தியிருப்பது அருமை. வீணையை ஒரு திரைப்பாடலில் இவ்வளவு நேர்த்தியாக கையாண்டிருப்பது கூடுதல் அருமை !

இப்பாடலை எப்போதும் கேட்டாலும் சுகானுபவம் தான். இதில் 'உறவுறுவாள்', 'உறவுறாத' என்ற சொற்கள் அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன என்பது என் கருத்து. பாடல் வரிகள் கீழே:

இது குழந்தை பாடும் தாலாட்டு..!
இது இரவு நேர பூபாளம்..!
இது மேற்கில் தோன்றும் உதயம்..!
இது நதியில்லாத ஓடம்..!

(இது குழந்தை பாடும்..)

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்..
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்..

சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்...
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்...

(இது குழந்தை பாடும்..)

வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்..

விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்...
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்..

(இது குழந்தை பாடும்..)

உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது..!
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது..!

உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது..
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது..!

(இது குழந்தை பாடும்..)


என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails